உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
நினைத்த அளவிலே உணர்வு அழியாமல்உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலேஉணர்வு அழிய உள்ளம் கிளர்தலும்கள் உண்பவர்க்கு இல்லை; காதல்வசப்பட்டவர்க்கே உண்டு.
என்ற வள்ளுவன் வாக்கினை அவன் இங்கு முழுமையாக உணர்ந்தான்...
உணர்ந்தான் என்று சொல்லுவதை விட மயங்கினான் என்பதே பொருத்தமாக இருக்க முடியும்.
குதிரை நின்றதை அவன் உணர்ந்து அவனும் இறங்க முற்பட்டதை அறிந்த அவள்... இவ்வளவு நேரம் நினைவுடனா இருந்தார்.... அவன் உடல் தன் அங்கங்களில் உராய்ந்து வந்ததை நினைத்து.... ஐயகோ அவராவது சொல்லி இருக்கலாம் என்று நினைத்து வெட்கத்துடன் ஓடி மறைந்தாள்.
விஜயனும் குதிரையை விட்டு மெதுவாக இறங்கி சூழலை பார்க்க முயல...
அவனை விடவும் உயரமான அந்த ஆஜானுபாகுவான மனிதரை கண்டு வியந்தான்...
அந்த மனிதனின் கண்களில்தான் எத்துனை தீட்சண்யம்... அவரின் பார்வை விஜயனை குறுகுறுக்க வைத்தது... யாரிவர்..? பழுவூரார்ராக இருக்கலாமோ?
"நாட்டை ஆள ஆசைப்படுபவனுக்கு... இத்தனை தடுமாற்றம் ஆகாது விஜயா...."
தன்னை பெயர் சொல்லி அழைத்ததும் சற்றே நிதானித்த விஜயன் அவர் தடுமாற்றம் என்று சொல்லியது தான் குதிரையில் இருந்து இறங்கியதை சொல்லுகிறாரா இல்லை அவன் மனதில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்து சொல்லுகிறாரோ என்று அச்சமேற்பட்டது....
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...." என்றான் சீற்றத்துடன்.
"அவசரக்காரனுக்கு புத்தி மட்டு...."
"இது புலியின் சீற்றம்...."
"கோபம் மனிதனை நிதானம் இழக்க செய்கிறது... அதைவிட மோகம் இன்னும் மோசம்... அவன் புத்தியை முழுவதுமாக மழுங்கடித்து விடுகிறது..."
அவர் தான் குதிரையில் அந்த பெண்ணுடன் வந்ததை சொல்லுகிறார் என்பதை உணர்ந்து...
"தாங்கள்...."
"பழுவூரான்...."
மேற்கொண்டு பேச முற்பட்டதை தடுத்து "விஜயா முதலில் உன் காயங்களுக்கு மருந்திடுவோம்.... பிறகு பேசலாம்...."
இதை அவர் கூறியதும் தன் பின் தலையில் கைவைத்து பார்த்த போது அவன் கைகள் உதிரத்தால் நனைந்தன...